குமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் மெலைனா அர்போரியா ஆகும். இது வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ்மேலைன என்பவரை நினைவூட்டும் வகையில் மெலைனா என்ற முதற்பெயரை கொண்டது. அர்போரியா என்பது மரத்தைப் போன்றது எனப் பொருளாகும். குமிழ்மரத்தின் தாயகம் பாரசீகமாகும்.இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, பர்மா, பங்களாதேசம், தென்சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.நம் நாட்டில் இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. ஈரச் செழிப்பான பகுதிகளில் வேகமாக நன்கு வளர்கிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையாக வளர்கிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் தனியார் நிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
குமிழ் பயிரிட நிலம் :
குமிழ்மரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரை உள்ள நிலப்பகுதிகளிலும் 25c-40c வரை வெட்ப நிலையில் உள்ள எல்லா பகுதிகளிலும் நன்கு வளர்கிறது. இம்மரங்களை நீர்பாசன வசதியுள்ள நிலப்பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மற்றும் வரப்புகளிலும் வளர்க்கலாம். இம்மரம் வடிகால் வசதியுள்ள ஆழமான மண் வளமுள்ள வண்டல்மண், செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண்ணில் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர் வடியா நிலங்களும் இம்மர உற்பத்திக்கு உகந்ததல்ல.
குமிழ்மரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரை உள்ள நிலப்பகுதிகளிலும் 25c-40c வரை வெட்ப நிலையில் உள்ள எல்லா பகுதிகளிலும் நன்கு வளர்கிறது. இம்மரங்களை நீர்பாசன வசதியுள்ள நிலப்பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மற்றும் வரப்புகளிலும் வளர்க்கலாம். இம்மரம் வடிகால் வசதியுள்ள ஆழமான மண் வளமுள்ள வண்டல்மண், செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண்ணில் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர் வடியா நிலங்களும் இம்மர உற்பத்திக்கு உகந்ததல்ல.
பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :
குமிழ் மரங்கள் நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்கத் தொடங்கினாலும் நன்கு பூக்க 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன் ஆகஸ்ட் மாதங்களில் பூக்கத் தொடங்கி ஏப்ரல்-ஜுன் மாதங்களில் விதைகள் முற்றி பழமாக கீழே விழ ஆரம்பிக்கும். பொதுவாக குமிழ் மரங்களில் நன்கு காய்பிடிக்கும். 15 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக 1 மரத்திற்கு 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 2000 குமிழ் விதைகள் இருக்கும்.
விதை சேகரம் :
விதைகளை நன்கு நேராக வளர்ந்து 15 வயதிற்கு மேற்பட்ட குமிழ் மரங்களிலிருந்து ஏப்ரல்-ஜுலை மாதங்களில் சேகரிக்கலாம் பழங்கள் முட்டை வடிவத்தில் இருக்கும். அவைகள் பழுத்து தானாகவே மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். பழங்களில் பழுப்பு நிற பழங்களை மட்டும் சேகரித்து 4-5 நாட்கள் வரை குவித்து வைத்து சதைப்பகுதியை நன்கு அழுக விட வேண்டும். அழுகிய கனிகளைப் பிசைந்து கொட்டைகளைக் கழுவி 2-3 நாட்கள் உலர வைக்க வேண்டும். மேலும் இவ்விதைகளில் தரமான விதைகளை மட்டும் பொறுக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்இ
விதையின் முளைப்புத் தன்மை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். முளைப்பு திறன் சுமார் 50 சதவீதமாகும். விதையை 24 மணிநேரம் வரை நீரில் ஊற வைத்து விதைநேர்த்தி செய்து விதைப்பது நன்று. ஒரு கிலோ எடையில் சுமார் 2000 விதைகள் இருக்கும்.
நாற்றங்கால் :
10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தி அமைக்க வேண்டும். கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாய்பாத்தியின் மீது வேம்பு பால் கரைசலை நன்றாக தெளிக்க வேண்டும். ஒரு அங்குல கனத்தில் குறு மணலை தாய்பாத்தியின் மீது பரப்ப வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட குமிழ் விதைகளை ஒரு தாய்பாத்திக்கு 5 கிலோவீதம் விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விதைக்க வேண்டும். குமிழ்விதையின் கனத்திற்கு சலித்த செம்மண் மற்றும் மணல் கலந்த கலவையை தாய்பாத்தியின் மீது தூவி விடவேண்டும். அதன் பின்பு தாய்பாத்தியின் மீது வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி விடவேண்டும்.
தாய்பாத்தியின் மீது 15 நாட்களுக்கு பூவாளி மூலம் காலை மாலை இரு வேளை நீர்ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு பூவாளி மூலம் தினமும் ஒரு வேளை நீர் ஊற்ற வேண்டும். குமிழ்விதைகள் 10-12 நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். இந்நிலையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றுகளை தாய்பாத்தியிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
செம்மண், வண்டல் மண், மணல் மற்று நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியாக சல்லடையில் சலித்து நன்றாக கலந்துவிட வேண்டும். அதனோடு 1 பாலித்தீன் பைக்கு (13X25) செ.மீ அல்லது (16X30) செ.மீ. அளவு பாலீத்தின் பைகள்) 6 கிராம் அசோஸ்பைரில்லம், 6 கிராம் பாஸ்போ பேக்டீரியம், 15 கிராம் வேம் மற்றும் 35 கிராம் அளவிற்கு மண்புழு உரத்தை நன்கு கலந்துவிடவேண்டும். இம்மண் கலவையை (13X25) செ.மீ. அளவுள்ள பாலீத்தின் பைகள் அல்லது (13X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். நாற்றங்காலில் கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு பாலை நன்கு தெளிக்க வேண்டும்.
மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை 10மீX1மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி வைக்க வேண்டும். தாய்பாத்தியில் குமிழ் நாற்றுகள் முளைத்து நான்கு இலைகள் வந்ததும் அவைகளை வேர்கள் சேதாரம் இல்லாமல் எடுத்து ஒவ்வொரு பாலித்தீன் பைக்கும் ஒரு செடிவீதம் நடவு செய்ய வேண்டும். தாய்பாத்தியில் முளைத்த தரமான இளங்கன்றுகளை மட்டும் எடுத்து பாலித்தீன் பைகளில் நடவு செய்தல் வேண்டும். பின்பு பாலித்தீன் பைகளில் நடவு செய்யப்பட்ட குமிழ்கன்றுகளுக்கு 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு தினமும் ஒரு வேளை பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். பின்பு 60 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். இதன் பின்பு வாரத்திற்கு இருநாள் நீர் ஊற்றுவது போதுமானது. மழைபெய்யும் நாட்களில் நாற்றுகளுக்கு நீர் விடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இடமாற்றம் செய்து தரம்பிரித்து அடுக்குதல் :
பாலித்தீன் பைகளில் விதைகள் முளைத்து 45வது நாள் பைச் செடிகளை இடமாற்றி தரம் பிரித்து அடுக்க வேண்டும். அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்பு 21 நாட்களுக்கு ஒரு முறை பை நாற்றுகளை இடமாற்றம் செய்து தரம் பிரித்து அடுக்க வேண்டும். மேலும் நாற்றங்காலில் நீர் தேங்கமால் பார்த்துக்கொள்ள வேண்டு்ம். நாற்றங்காலை சுகாதாரமான முறையில் பராமரித்தால் பூச்சி தாக்குதல் மற்றும் இதரநோய்கள் வருவதை கட்டுப்படுத்தலாம். பை நாற்றுகள் ஆரோக்கியமாக நன்கு வளர பஞ்சகாவ்யா கரைசலை 1 லிட்டருக்கு 30 மி்.லி. வீதம் கலந்து நாற்றங்கால் எழுப்பப்பட்ட 60 நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
தோட்டம் உற்பத்தி :
நான்கு மாத காலத்தில் குமிழ் நாற்றுகள் சுமார் 75 செ.மீ-1மீ உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இதுவே நடுவதற்கு உரிய சமயமாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டிய இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். நிலம் சமமாக இருப்பின் ஒரு சால் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 5மீ X 5மீ இடைவெளியில் 45 செ.மீ X 45 செ.மீ X 45 செ.மீ அளவில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் முதல் மழையில் 160 குழிகள் எடுக்க வேண்டும். பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சம பங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழி உரம் அல்லது 2 கிலோ தொழு உரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவு நிப்பி விட வேண்டும் . ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பருவ மழை கிடைத்தவுடன் பைசெடிகளை பாலித்தீன் பைகளை அப்புறப்படுத்திவிட்டு குழிகளில் நடவு செய்யவேண்டும். குழிகளின் மீதி பகுதியை குழிகளில் சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு நிரப்பி செடிகளை சுற்று இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்துவிட வேண்டும்.
நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும் நிர்வகித்தலும் :
நாற்றங்காலிலுள்ள குமிழ்மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி, புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் குமிழ் நாற்றுகளின் தளிர்களையும், இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்களான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒருசில குமிழ் நாற்றுகள் வாடி கருகிவிடும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த “என்டோசல்பான்” பூச்சிக்கொல்லியை 1லி நீரில் 10 ம.லி. கலந்து கைத்தெளிப்பான் மூலம் நாற்றுகளில் மீது அடித்தால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தகசாவ்யா அல்லது வேம்புபால் அல்லது புகையிலை மற்றும் வேம்பு சோப்பு கரைசலை 1லிட்டர் தண்ணீரில் 30 மி.லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் நாற்றங்காலில் நீர்தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும்பட்சத்தில் குமிழ்நாற்றுகளுக்கு வாடல் நோய் மற்றும் அழுகல் நோய் உண்டாகும். இந்நோய்களை கட்டுப்படுத்த பிளேன்டோமைசின் 0.1% என்னும் மருந்தை மண்ணின் வேர்பகுதிக்கு அருகே ஊற்ற வேண்டும்.
தோட்ட பராமரிப்பு : (Maintenance of Plantation)
குமிழ்மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். செடிகள் நன்குவளர மாதம் இருமுறை நீர் விடுவது அவசியமாகும். ஆறுமாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் இட்டு செடிகளை சுற்றி கொத்தி களை எடுப்பதன் மூலம் செடிகள் நன்கு வளரும். இவ்வாறு தொடர்ந்து தோட்டம் உற்பத்தி செய்த ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் வரை பராமரிப்பு பணி மேற்கொண்டால் குமிழ்கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.
வேளாண்காடு வளர்ப்பு :
குமிழ் மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, நிலக்கடலை, மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு, கொள்ளு மற்றும் காய்கறிகள் போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம்.
தோட்டம் எழுப்புவதற்கான செலவு :
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 160 குமிழ் மரக்கன்றுகளை நடப்படும். இதற்கான சாகுபடி செலவு பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவு : முதலாமாண்டு பராமரிப்பு :
மகசூல் சேகரம் மற்றும் வருவாய் :
குமிழ்மரத் தோட்டத்தை நன்கு பராமரிக்கும் பட்சத்தில் மரங்கள்ச சிறப்பாக வளர்ந்து பத்தாண்டு காலத்தில் சுமார் 120 செ.மீ சுற்றளவுடன் 15மீ உயரம் வரை வளர்கிறது.
ஒரு ஏக்கரில் 160 குமிழ்மரங்களின் மூலம் கிடைக்கும்.
மகசூல் 0.33 மெ.டன் / 1 மரம் 52.80 மெ.டன்
வருவாய் 52.80 மெ.டன் @ ரூ.9200/- மெ.டன் - ரூ 4,85,760.00
சராசரியாக ஓராண்டு வருவாய் - ரூ 48,576.00
மரப்பயன்பாடு :
குமிழ்மரத்தின் இலை, தழைகள், கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். இம்மரம் தீப்பெட்டி, தீக்குச்சி, ஒட்டு பலகை மற்றும் மரக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மேஜை, நாற்காலிகள், ஜன்னல்கள், நிலைக்கதவுகள், பலகைகள், பெட்டிகள் மற்றும் தோலக் என்ற இசைக்கருவி செய்ய குமிழ்மரம் பயன்படுகிறது. பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத்தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து உபரி வருமானம் பெறலாம்.
மருத்துவ பயன்கள் :
குமிழ் மர இலைச்சாறு சிறுநீரக கோளாறு, வெள்ளைப்படுதல், வெட்டை மற்றும் இருமலுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. தலைவலியை நீக்க குமிழ் இலையை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போடலாம். குமிழ் மரப்பூக்கள் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன, குமிழ் மரவேர்கள் பசியை தூண்டவும், பெண்களுக்கு பால்பெருக்கியாகவும், மலமளிக்கியாகவும், புத்தி பேதலித்தல் மற்றும் வலிப்பு நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காய்ச்சல், அஜீரண கோளாறு, வெள்ளைப்படுதல் ஆகியவற்றிற்கு வேரின் கஷாயம் மருந்தாக பயன்படுகிறது.
வெளியீடு :
தமிழ்நாடு அரசு வனத்துறை
வனவியல் விரிவாக்கப் பிரிவு
சென்னை - 600 048.